விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பால் உற்பத்தியாளர்கள், குழு உறுப்பினர்கள் என ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசியை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "விருதுநகர் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால், இந்த மாவட்டத்தில் நூற்பாலைகள், கைத்தறி, விசைத்தறி, பட்டாசு போன்ற தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நாளை முதல் சில விதிமுறைகளுக்குட்பட்டு சமூக விலகலை கடைபிடித்து, தொழில் செய்ய அனுமதிக்கப்படும்.
என்ன செய்தாலும், அதில் ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும். அண்டை மாநிலமான, கர்நாடகாவில் மதுக்கடைகள் திறந்தவுடன் தமிழ்நாடு அரசு உடனே திறக்கவில்லை. கர்நாடகாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதுபோல், புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சென்று இரண்டு கிலோமீட்டர் தூரம் கடந்து மதுவை வாங்கி வருவதால், சில போலியான மதுபானங்கள் உள்ளே வர வாய்ப்புள்ளது.
இதனைத் தடுப்பதற்காகத் தான் முதலமைச்சர் டாஸ்மாக் கடையைத் திறக்க முன் வந்துள்ளார். மக்களின் நலன் காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சு!