விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலுள்ள பங்களா தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (65). இவர் காய்ச்சல், சர்க்கரை நோய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுப்பிரமணியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன்பின், அவரது உடல் மதுரை தத்தனேரியில் உள்ள மின்மையான சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக சோதனை முடிவு வெளிவந்துள்ளது.
பின்னர், அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நெருக்கமான உறவினர்கள் அனைவருக்கும், கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.