விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி அழகம்மாள் (58). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அழகம்மாள் நேற்று காலை (அக்.13) 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்து திரும்பிய பிறகு தனது தோட்டத்தில் கருவேப்பிலை செடிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
இதையடுத்து மோட்டார் சுவிச் போடும்போது கால் வழுக்கி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை அறியாத அவரது உறவினர்கள், 100 நாள் வேலைக்குச் சென்ற அழகம்மாள் மாலை வரை வீடு திரும்பவில்லை என்று நினைத்து தேடினர்.
அப்போது அழகம்மாள் தோட்டத்திலுள்ள கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சாத்தூர் தீயணைப்புத்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அப்பையநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சோலார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் சாலை மறியல்