இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களுக்கு அடுத்தபடியாக இந்த வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாட்டில் சமீபமாக, தினசரி 2500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் - 19 உறுதி செய்யப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உலக ஆராய்ச்சியாளர்களும் hydroxychloroquine, remdesivir என்று ஒவ்வொரு மருந்துகளையும் சோதனை முறையில் பரிசோதனை செய்து பார்த்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பைசா செலவில்லாமல் உலகையே ஆட்டிப் படைக்கும் கரோனாவை குணப்படுத்தும் ஒரு வழிமுறையை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சடகோப ராமானுஜ ஜீயர், “கரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்கப்பட வேண்டும்.
வீடுகளில் தொடர்ந்து 108 முறை ’ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மக்கள் ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை, கரோனா தானாக ஓடிவிடும்” என்று கூறினார்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த செய்தியாளர் சந்திப்பு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து நடத்தப்பட்டது. மேலும், ஜீயர் அருகில் இருந்தவர் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்து இருந்தார்.
கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே திணறிவரும் இச்சூழலில், இந்த டிஜிட்டல் யுகத்தில் இருந்துகொண்டு இதுபோன்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பேசிய ஜீயரின் செயலை, சமூக செயற்பாட்டாளர்களும், இளைய தலைமுறையினரும் இணையத்தில் கண்டித்து பதிவிட்டுவருகின்றனர்.
முன்னதாக, கரோனா பரவல் குறித்தும் அதற்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் தவறான தகவலை பரப்பியதற்காக கோவையைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கரும், சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருநீறு பூசும் எங்களை கரோனா அண்டாது - சாமியார்