விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதி ஏகேஜி நகரில் வசித்துவருபவர் முகேஷ் (24). இவருக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட முகேஷ் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கிருந்த செவிலியர் அவருக்கு ஊசி செலுத்தியவுடன் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர் வேறு ஊசி செலுத்தியுள்ளா். இதற்கடுத்து, முகேஷ் உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், முகேஷை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, அவர் முன்னதாக இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக சென்ற நபர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகவும் கூறிய முகேஷின் உறவினர்கள் இதுதொடர்பாக சுகாதராத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.