விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர், பட்டம்புதூர் இடையேயான தனியார் நிலத்தில் தூர்வாரும் பணிக்கு குழி தோண்டிய போது, நாயக்கர் காலத்தில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று அருங்காட்சியக காப்பாளர் முன்னிலையில் மாவட்ட அருங்காட்சியகத்திற்கு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தக் கல்தூண் பற்றி அருங்காட்சியக காப்பாளர் கூறுகையில், இது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்து கல் சிற்பம். இந்தச் சிற்பம் நான்கு அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் இறந்தவர்கள் நினைவாக நடப்படும் நினைவு கல்தூண். இந்த கல்தூணில் இரண்டு இசைக்கலைஞர்களின் நினைவாக அமைக்கப்பட்டதாக இருக்கலாம்.
இதில், ஆண், பெண் இருவர் கை கூப்பி நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இடுப்பில் உருமி முரசு போன்ற இசைக்கருவிகள் இசைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டோரா போடுவார்களாக இருக்கலாம், என்றார்.