கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக மூணாறு ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் டாடா கண்ணன்தேவன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்த 93 பேர் சிக்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள். தொடர்ந்து ஐந்து நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கியிருந்தனர்.
மழை காரணமாக மின்சாரம் இல்லாததால் அவர்கள் யாரிமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் வனத்துறையினர், வருவாய்துறையினர், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மண்சரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்த ராசையா, சரோஜா(எ) மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண் மகேஸ்வரன், அண்ணாத்துரை, மரியபுஷ்பம் என ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அவரது உறவினர்கள் உடல்களை மீட்டுத்தரும்படியும், நிவாரணம் வழங்கும்படியும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இறந்த, காயமடைந்தவர்களை பார்க்கச் சென்ற உறவினர்களுக்கு கேரள அரசு எந்தவித வசதிகளையும் செய்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணியில் கேரளாவுக்கு உதவ தயார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்