விருதுநகர்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமூகவியல் பாடத்திட்டத்தில் இருந்த 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' புத்தகம் நீக்கப்பட்டதற்கு மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமூகவியல் பாடத்திட்டத்தில் 'வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்' புத்தகம் இடம்பெற்றிருந்தது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு காரணமாக அருந்ததி ராயின் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறி தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இது குறித்த தனது கண்டனத்தை காணொலி பதிவாக வெளியிட்டுள்ளார்.
அதில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடப்பகுதி காணாமல் போய்விட்டது. ஆர்.எஸ்.எஸ் மாணவரமைப்பு ஏ.பி.வி.பி எதிர்ப்பு காரணமாக அருந்ததி ராயின் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசு கைக்கட்டி நிற்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி; ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட கட்சி; தற்போது ஆர்எஸ்எஸ் கையில் சிக்கியிருக்கிறது, என்பதற்கு எடுத்துக்காட்டாக இது இருக்கிறது. இந்தியா முழுவதும் கல்வியையும் பத்திரிகையையும் கையில் எடுக்க துடித்து கொண்டு இருக்கிறது பாஜக.
வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு, இந்த நிலை மாறும். மேலும் தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக அதிமுக ஆட்சியை ஆர்எஸ்எஸ் கையில் எடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் 2021 தேர்தலில் மதசார்பற்ற ஆட்சி வந்தால்தான் கல்வியையும், பத்திரிகையையும் காக்க முடியும்” என கூறினார்.