அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பாக 'விழுதுகளை நோக்கி' என்ற தலைப்பில் இளைஞர்களை சந்திக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் பகுதியாக, விருதுநகர் மாவட்டம் கவுண்டம்பட்டி என்ற கிராமத்தில் இளம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிரஹாம் ராய், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன், "இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களை காங்கிரஸில் இணைப்பதே இந்த நிகழ்ச்சியில் நோக்கமாகும்.
சிவகாசி பகுதியில் இயங்கும் அனைத்து தொழில்களையும் அழிக்க நினைக்கிறது மோடி அரசு. பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட்டை தடை செய்ததன் மூலம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நலிவடைய செய்து, கருப்பு சந்தை உருவாகக்கூடும்.
பசுமை பட்டாசுகள் செய்யவேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் பற்றி நீதிமன்றம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி 18% வரியால் தீப்பெட்டி துறையிலும் நிறைவடைந்துள்ளது. தீப்பெட்டிக்கு 12% மாக குறைக்க வேண்டும்.
கர்நாடகாவில் 'ஆப்ரேசன் கமலா' என்ற பெயரில் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியை பாஜக கைப்பற்றியது. அதே போல் பல மாநில அரசுகளை நிலையற்றதாக்க பாஜக நினைக்கிறது. " எனத் தெரிவித்தார்.