விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஜார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீலா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இப்பெண் தளவாய்புரம் தனியார் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியே சென்ற சீலா தேவி வீடு திரும்பவில்லை என அவரது அக்கா சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சென்னையில் ஏற்கனவே திருமணமான வீரமணி என்பவருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில், சென்னை விரைந்த தனிப்படை காவல் துறையினர் சீலா தேவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், வீரமணி வன்கொடுமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.