விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 81). இவர் அப்பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
திமுக பிரமுகரான இவர், கடந்த 1975ஆம் ஆண்டு மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருடம் சிறை சென்று திரும்பியவர் ஆவார். சிறையில் இருந்தபோது தனது எட்டு வயது மகன் இறந்த செய்தி கேட்டும், பரோலில் வெளிவர விரும்பாத கொள்கைப் பிடிப்பு கொண்டவராகத் திகழ்ந்துள்ளார் கருப்பையா.
இந்நிலையில், கருப்பையா வறுமையில் வாடுவது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கி உதவி செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனக்கு உதவிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தனது மனமார்ந்த நன்றிகளை கருப்பையா தெரிவித்துக் கொண்டார்.