விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஆணையூர், விஸ்வநத்தம், சிந்து ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பகிர்மான நீரூற்று நிலையம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் குறை சொல்லியே பிழைப்பு நடத்துகின்றனர். சாத்தான்குளத்தை வைத்து பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறார்கள். முதலமைச்சர் பழனிசாமி யார் தவறு செய்தவராக இருந்தாலும் மன்னிக்க மாட்டார். காப்பாற்ற முயற்சி செய்ய மாட்டார். ஆகவே தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார்.
சாத்தான்குளத்தில் நடைபெற்றது ’மனிதத் தன்மையற்ற செயல்’ என அனைவரும் கண்டிக்கிறார்கள். இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மக்களுடைய எண்ணம் தான், அரசுடையை எண்ணமாகவும் உள்ளது. கரோனா தொற்றுக்கான முதல் மருந்து மன தைரியம் தான். அந்த மன தைரியத்தை கொடுக்கின்ற வலிமையான சக்தியாக இந்த ஆட்சி இருக்கிறது.
ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு ஆக்கப்பூர்வமான அறிக்கை கொடுத்தால் நிச்சயமாக எடப்பாடியார் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால், ஸ்டாலின் கொடுக்கின்ற அறிக்கையெல்லாம் தமிழ்நாடு மக்களுக்கு அக்கப்போரான அறிக்கையாக உள்ளது. எனவே தான் முதலமைச்சர் அவற்றை ஏற்றுக்கொள்ள யோசனை செய்கிறார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பழகனுக்குக் கரோனா உறுதி!