விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக உந்து நிலையம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது எனவும்; கரோனா பாதிப்பு குறித்து இறைவன் மீது பழிபோடுவது கண்டனத்துக்கு உரியது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், எடப்பாடி ஆட்சி நடக்கப் போய் தான், நாம் இங்கு நிற்கிறோம். அதே திமுக ஆட்சி நடந்திருந்தால் ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இறப்பவர்களை மறைக்க முடியாது. ஸ்டாலின் தினமும் வெற்று அறிக்கைகளை விடுகிறார். வேறு வழியில்லாமல் முழிக்கிறார்.
நகைச்சுவை அரசியல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். எடப்பாடி பாலாகக் கொடுக்கிறார். ஆனால், ஸ்டாலின் விஷமாகக் கக்குகிறார். நல்லவைகளை சிறு குழந்தைகள் சொன்னால்கூட முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார். ஸ்டாலினின் வார்த்தைகளை அரசியல் அரங்கிற்குள் இருப்பவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:இந்தியாவில் 4.25 லட்சத்தை எட்டிய கரோனா பாதிப்பு!