விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதியதாக அமையவிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட வேண்டிய இடத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், “அரசு கலைக்கல்லூரி அமையவிருப்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என சட்டப்பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நான் முதலமைச்சரிடமும், உயர் கல்வித்துறை அமைச்சரிடம் பேசி தற்போது கலைக்கல்லூரி இப்பகுதியில் அமைய இருக்கிறது.
ஜனவரி அல்லது பிப்ரவரி மதத்தில் கட்டட பணிகள் முடிவடைந்து புதிய கட்டடத்தில் கல்லூரி ஆரம்பமாகும். இப்பகுதியை சுற்றியுள்ள ஏழை- எளிய மக்களுக்கு இந்தக் கல்லூரி ஒரு வரப்பிரசாதமாக அமையும். ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியான ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது.
இப்பகுதி மக்களின் கோரிக்கை, சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கையை முதலமச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு ஆண்டாள் கலைக்கல்லூரி என்று பெயர் சூட்ட பரிசீலிக்கபடும். இது பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்லூரியாக அமைக்கபடவுள்ளது.
ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார், கடையை திறப்பார். திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமம், விவசாயம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்கவேண்டும். முதலமைச்சரின் புகழை கெடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.
அவர் முயற்சி ஒருகாலும் பழிக்காது. அவர் முயற்சி கானல் நீராகத்தான் போகும். உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுடவேண்டும், இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பு இழுக்க கூடாது. காவல்துறை ராகுல் காந்தியை தடுத்திருப்பார்கள், தள்ளிவிட்டு இருக்க வாய்ப்பில்லை அவர் தவறி விழுந்து இருக்கலாம்.
பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி, பிரதமரும் உத்தரப் பிரதேச முதலமைச்சரும் ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற ஈனத்தனமான செயலை செய்திருக்க மாட்டார்கள். நடந்தச் சம்பவம் சித்தரிக்கப்பட்டது என்று தெரிகிறது.
உண்மைக்குப் புறம்பான சம்பவமாக தெரிகிறது. இதை வைத்து ஈனத் தனமான அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பை கெடுக்கும். மேலும் துணை முதலமைச்சரை யாரும் புறக்கணிக்கவில்லை, பணியின் காரணமாக அரசு விழாக்களில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், உதவி ஆட்சியர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நேற்று ராகுல் காந்தி...இன்று டெரிக் ஓ பிரையன்...!