முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டந்தோறும் நேரடியாக சென்று கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், நோய்ப் பரவலை முற்றிலும் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை உரிய அலுவலர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நாளை விருதுநகரில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர், "நாளை விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் கரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வை மேற்கொள்வார். பின்னர் விவசாயிகள்,தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி அவர்களது கோரிக்கைகளை விரிவாக கேட்கவுள்ளார்.
பின்னர், 28 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது மட்டுமின்றி, 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் கீழ் 45 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை எட்டாயிரத்து 466 பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். விருதுநகர் வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவுள்ளோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை காண திரண்ட அதிமு தொண்டர்கள் - கரோனா பரவும் அபாயம்!