விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏழை - எளிய மக்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, 15 ஆயிரம் பேருக்கு தலா 10 கிலோ கொண்ட அரிசி வழங்கப்பட்டது. அந்நிகழ்வின்போது அமைச்சர், அரசு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ' தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழில்கள் இருந்தாலும், பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து, தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறார். ஆவின் பால் தங்கு தடையின்றி, வீடுகள் தேடி வழங்கப்பட்டு வருகிறது.
புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வதுபோல், பிரச்னை ஏற்படும்போது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். தற்பொழுது மக்கள் அனைவரும் உயிர் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் வலிமை, திறமை இந்திய மக்களிடம் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக, கரோனாவை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
பிரதமரும், முதலமைச்சரும் கரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பார்கள். அரசின் நடவடிக்கையை அரசியலுக்காக, சிலர் விமர்சித்தாலும் ஊரடங்கை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்’, என்றார்.
இதையும் படிங்க: அனுமதி பெறாமல் விற்பனை: 500 கிலோவுக்கு அதிகமான இறைச்சி பறிமுதல்!