விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச் சாவடியில் வழக்கம்போல் காவலர்கள், சுகாதாரத் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லாரி ஒன்று கேரளாவிலிருந்து, மேற்கு வங்காளம் செல்வதற்காக தமிழ்நாட்டின் சாலைகளில் பயணித்தது தெரியவந்தது. இந்நிலையில் சொக்கநாதன்புதூர் சோதனைச்சாவடி அருகே லாரி வந்தது. அப்போது நிறுத்தி சோதனை செய்ததில், லாரியில் 75 புலம்பெயர் தொழிலாளர்கள் கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் கட்டட வேலை உட்பட பல்வேறு வேலைகளில் கூலித் தொழிலாளிகளாகப் பணியாற்றி வந்தவர்கள் என்று தெரிந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவு தொடரப்பட்ட நிலையில், லாரிகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு இவர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர். இவர்களை சோதனைச் சாவடியில் நிறுத்தியதை அடுத்து, காவல் துறையினர் கொடுத்த தகவலின் பெயரில் வந்த வட்டாட்சியர் ஆனந்தராஜ், ராஜபாளையம் காவல் துறைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான அலுவலர்கள் விசாரணை செய்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில், தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தேவிப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இவர்கள் அனைவரையும் தங்கவைத்து முதற்கட்டமாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் இவர்களை தனிமைப்படுத்தி கரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்து, அதன் பின்பு இவர்களை ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் காங்கிரஸ்