விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். ரகுராமனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி சாத்தூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம், சின்னக்காமன்பட்டி, மேட்டமலை, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுற்று பயணம் சென்று பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தேன். அப்போது அனைவரும் கூறிய ஒரே பிரச்னை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கிராம பகுதிகளில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் அனைவரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம் என்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் எந்த பிரச்னைகளையும் கண்டுகொள்ளவில்லை. மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் என்னை எம்.எல்.ஏவாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பார்க்க எண்ணினால் அப்போது நிச்சயம் நான் தேர்தலில் போட்டியிடுவேன். நல்லாட்சி அமைய ஆட்சி மாற்றம் கொண்டு வர அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ரகுராமனை ஆதரியுங்கள் எனக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பரப்புரையின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.