விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி(47). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி குடோன் சடையம்பட்டி கிராமத்தில் உள்ளது.
இந்த குடோனில் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்கள் மொத்தமாக சேமிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு (ஆக.6) அந்தக் குடோனில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீயானது மேலும் அருகேயுள்ள பகுதிகளுக்கும் பரவியதால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் உத்தரவின்பேரில் சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட நான்கு பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் சுமார் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனுக்கு அருகிலிருந்த ஆறு வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. மேலும் தீப்பெட்டி குடோனிலிருந்த 20 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்தச் சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் வயல் வெளியில் தீ விபத்து!