தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கினை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால், பஸ், வேன், கார், ஆட்டோ போக்குவரத்து, கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முடங்கின.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்.05) கரோனாத் தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவித்திருந்தது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பட்டாசுக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தயாரிப்புதான் பிரதானத் தொழிலாக நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ளனர். முழுமையாக வேலையின்றி ஒரு மாதகாலமாக இவர்கள் தவித்து வந்த நிலையில் இன்று (ஜூன்.07) தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் தீப்பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தங்கள் வேலையைத் தொடங்கி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!