விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை ஆதரித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்தத் தேர்தல் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கும், மற்றொரு வேட்பாளருக்கும் நடைபெறக்கூடிய தேர்தல் இல்லை, விருதுநகரின் வளர்ச்சிக்கானதா, வன்முறைக்கானதா? எனத் தோன்றுகிறது.
நேற்று (ஏப். 2) கோயம்புத்தூரில் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட பேரணியில் கடையை மூடச் சொல்லி பாஜகவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். அதைப்போலவே விருதுநகரிலும் உருவாக்குவதற்கு வாய்ப்பு கொடுக்கலாமா?
அமைதியான முறையில் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும் விருதுநகரை வன்முறையில் ஈடுபடும் பாஜக கையில் கொடுக்கலாமா? இந்தக் கேள்வியை வாக்குச்சாவடி செல்லும்போதும் அதற்கு முன்னரும் யோசிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "விருதுநகர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த பூமி. இங்கு சிறு வியாபாரிகளும் மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்கின்ற இடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இது நாள்வரை மதக்கலவரமோ சாதிக்கலவரமோ நடந்ததில்லை. ஆனால், பாஜக வந்தால் மதக்கலவரம் உடனடியாக வரும், அமைதியாக யாரும் வியாபாரம் செய்ய முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நம்மைப் பொருத்தவரை உண்மையாகவும், நிம்மதியாகவும் தொழில் செய்கிறவர்கள் அச்சப்பட வேண்டிய கட்சியாக பாஜக மாறி இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதுபோல மோடி டாடி ஆகி டாடி அதிமுக ஆகிவிட்டது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இறந்தபின் அது அமித் ஷா திமுகவாகிவிட்டது.
விருதுநகரைப் பொறுத்தமட்டிலும் தாமரை மலருமா, உதயசூரியன் உதிக்குமா? என்பதுதான். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை எந்தக் காரணத்திற்காகவும் அமித் ஷாவிடமும் மோடியிடமும் கைக்கூப்பி நிற்கப்போவதில்லை. அவரது நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையுடன் தமிழ்நாட்டிற்காகவும் தமிழனின் தன்மானத்திற்காகவும் போராடக் கூடியவர். அவர் முதலமைச்சராக வேண்டும் என்றால் விருதுநகரிலே ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியிலிருந்து தப்பிச் சென்று ராஜபாளையத்தில் அடிவாங்கப் போகிறார். இத்தோடு அவரது அரசியல் முடியப் போகிறது. அமைச்சர் நாளைக் கழித்து முதல் மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு ஜோதிடம்தான் பார்க்க வேண்டும் வேறு எதையும் பண்ணப் போவதில்லை.
சகோதர சகோதரிகளுக்கு நான் கூறுவது அமைதியாக இருக்க வேண்டிய விருதுநகர் வேண்டுமா அல்லது மதக்கலவரம் நடக்கக்கூடிய விருதுநகர் ஆக வேண்டுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் வரும் ஆறாம் தேதி நடக்கும் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கு தீர்வாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக சுனாமியை போன்று ஆபத்தானது - டிடிவி தினகரன்