விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி தைக்கா தெருப் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் இருவர் குடிபோதையில் ரகளை செய்துள்ளனர்.
பின்னர் அந்தப் பகுதி மக்கள் சத்தம்போட்டு இரண்டு பேரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக நள்ளிரவில் கூமாப்பட்டி தைக்கா தெருவிற்கு வந்த இரண்டு இளைஞர்கள் வேட்டியை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு ஜலால் என்பவரின் தேநீர் கடைக்குத் தீவைத்துள்ளனர்.
பின்னர் ஒருவர் அந்த வழியாக வருவதைக் கண்ட இருவரும் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அந்தத் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடைக்கு இருவர் தீவைக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகிய நிலையில், அதை வைத்து குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில் பெரிய கருப்பன் என்ற இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் மற்றுமொரு குற்றவாளியான முனீஸ்வரனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.