விருதுநகர் மாவட்ட டீ, காபி, ஸ்வீட், காரம் கடை உரிமையாளர்கள் சங்க செயலர் தங்கராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கரோனா நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில், டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டீக்கடைகள் இயங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை டீ, காபி கடை ஊழியர்கள் இதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தை கொண்டே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டீக்கடைகள் இயங்க பல கட்டுப்பாடுகளை விதிப்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆகவே விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி டீ, காபி கடைகள் இயங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து டீ கடைகளும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், "கட்டுப்பாடுகளை தளர்த்தினால் டீக்கடை ஊழியர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்க வாய்ப்பாக அமையும். ஆகவே கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு