விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை நோக்கி புயல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. திமுக பின்தொடர்ந்து தவழ்ந்து வந்தாலும் வெற்றிபெற முடியாது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு சம்மட்டி அடி விழும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் முன்னணி தலைவர்கள் யாரும் பெரியார் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பெரியாரைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், "புதுச்சேரி பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவியை வெளியேற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஆணித்தரமாக அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும்" என அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல் ' - ராஜேந்திர பாலாஜி