விருதுநகர் அருகே உள்ள செங்கல் குடியைச் சேர்ந்தவர் சக்தீஸ்வரி. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்ற காவல்துறையில் பணிபுரியும் நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது மோகன்ராஜ் விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்திருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை பணிமாற்றம் எனக்கூறி திருச்சி, தூத்துக்குடி போன்ற ரயில் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து சக்தீஸ்வரி கேட்டதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இந்த பணி மாற்றங்களுக்குக் காரணம் மோகன்ராஜ் தனது காவல்துறை பணியை தவறாக பயன்படுத்தி பாண்டிச்சேரியில் இருந்து மலிவு விலைக்கு மதுவகைகளை வாங்கி வந்து விருதுநகர், திருச்சி போன்ற இடங்களில் விற்று வந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது சக்தீஸ்வரிக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி மோகன்ராஜிடம் கேட்டதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சமாளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த சக்தீஸ்வரி, அவரது செல்போன் உரையாடல்கள் மூலம் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்திருக்கிறார். அதை தொடர்ந்து அவர் தன் கணவர் பல பெண்களை ஏமாற்றி வருவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மூன்று மாதங்களுக்கு முன்பு விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மோகன் ராஜ் காவலர் என்பதால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த சக்தீஸ்வரி விருதுநகர் ரயில்வே காவல் நிலையம் முன்பு தான் புகார் அளித்து மூன்று மாதங்கள் ஆகியும் அதுகுறித்து எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை சமாதானம் செய்ய காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு சமரசம் அடையாத சக்தீஸ்வரியை அங்கிருந்த ஆண் காவலர் கையை பிடித்து காவல் நிலையத்திற்குள் இழுத்துச் சென்றார். அதை தொடர்ந்து சக்தீஸ்வரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.