விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் மல்லாங்கிணர் முடியனூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை பார்த்து வரும் ராமர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு தொல்லை தந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்க்காமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பலமுறை தன்னை குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ளும்படி ராமர் கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் இவரை சேர்த்துக்கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராமர், தூத்துக்குடி - திருநகர் செல்லும் வழியில் உள்ள உயர்மின் அழுத்தக் கோபுரத்தில் ஏறி தன்னை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர், மல்லாங்கிணர் காவல்துறையினர், விருதுநகர் தீயணைப்பு துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராமர் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.