கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., வசந்த குமார் கரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், 6 மாதங்களுக்குள் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும்; அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்குத் தேவையான கட்டுப்பாட்டு கருவிகள் 930, கண்ட்ரோல் யூனிட் மற்றும் 860 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, ராமநாதபுரம் வேளாண் விற்பனை கிடங்கியிலிருந்து கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த சரிபார்ப்புப் பணியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் முத்துலட்சுமி, அரசு அலுவலர்கள், கட்சிப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்தப் பணியானது இன்று இரவு (செப்.21) முடிவடைந்து நாளை இந்த இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரிக்கு அனுப்பப்படும் எனக்கூறப்படுகிறது.