விருதுநகர்: அருப்புக்கோட்டை நகராட்சித் தேர்தலில் 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., வெள்ளக்கோட்டை, புளியம்பட்டி, சிவன்கோயில் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'திமுக அரசு தொலைநோக்குப்பார்வையுடன் தான் அனைத்து திட்டங்களையும் கொண்டு வரும்.
தமிழ்நாட்டின் நிலை...
தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடியை பறக்கவிடுவது தான் தேசியமா? பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பாஜகவிற்கு ஒரு ஓட்டு போட்டால் கூட, தமிழ்நாடு என்ன நிலைக்கு ஆளாகும்?
அதிமுக ஆட்சியில் கரோனா ஊரடங்கில் ரூ. 5000 வழங்க கோரிக்கைவிடுத்தோம். ஆனால், அவர்கள் வழங்கவில்லை. ரூ. 1000 மட்டுமே வழங்கினார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ. 4000 அனைவருக்கும் வழங்கினோம். அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆறு மாதத்திற்குள் விரைந்து நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் கொடுத்த ஆதரவினால் இப்பொழுது நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவினர் மக்களை மதத்தின் பெயரால் பிரித்து ஓட்டு பெறுகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு ஈடாகத் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறப்பான ஒரு மாநிலமான கர்நாடகத்தில், தற்போது மதக்கலவரத்தை உருவாக்கி பள்ளி, கல்லூரிகளை அடைக்க வேண்டிய சூழ்நிலைக்கு பாஜக கொண்டு சென்றுள்ளது.
எனவே, மக்களுக்காக பாடுபடும் திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'பொள்ளாச்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியோரும் தேர்தலில் போட்டி' - செந்தில் பாலாஜி சாடல்!