விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது, "எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. மக்களுக்கு வேலை செய்வதற்காக வந்துள்ளோம். மக்களை உயர்த்த நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும். தங்களின் வாக்குறுதிகளில் இலவசங்கள் கிடையாது. ஏனெனில் இலவசங்களால் ஏழ்மையைப் போக்க முடியாது. நாம் வறுமையற்ற அருப்புக்கோட்டையை உருவாக்குவோம்.
கஜா புயலைப் பார்வையிட்டது போல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. இது என்னுடைய பணம். வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளனர். அவர்களை நான் பல்லக்கு தூக்கி தன் தோளில் சுமக்கிறேன். தனது வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்படியே காப்பி அடிக்கிறார். மிகுந்த பசியில் உள்ள திமுகவினர் இரட்டை இலையில் கூட சாப்பிடுவார்கள்.
திரைப்பட வாய்ப்பை விட்டு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி நஷ்டம் அல்ல. நான் வருமானத்தை விட்டு விட்டு வந்துள்ளேன். எனது படத்தில் அதிமுக குறுக்கிடாமல் இருந்திருந்தால் எனது வருமானத்தை ரூ.250 கோடியாக காட்டியிருப்பேன். ஆட்சியாளர்கள் பெரும் தொகையை எடுத்துக் கொண்டு இலவசங்கள் என்ற பெயரில் சில்லறையை வீசுகிறார்கள். உங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று கூறுங்கள் அல்லது ரூ.5 லட்சம் கேளுங்கள்.
சலுகைகளை கொடுத்தால் அதை திருப்பி வாங்க டாஸ்மாக் என்ற கல்லாப்பெட்டியை வைத்துள்ளார்கள். கல்வியை கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்திற்கு பாதுகாப்பாக ஐஏஎஸ் அலுவலர்களை நியமிப்பது நியாயமா?
இங்கு படிப்புக்கு மதிப்பில்லாமல் போகிறது. இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். திறன் மேம்பாட்டு மையம் அமைப்பது இந்தியாவின் புதிய சத்தியாகிரகம். மனிதவளம் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக உயர்த்தப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் தமிழன் வெல்வான். நாங்கள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம். தமிழகத்தை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என்பதாக இருக்கவேண்டும்" என்றார்.