விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நினைவுக்கு வருவது பால்கோவா. இந்த பால்கோவா தயாரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு காலத்தில் இரண்டு மூன்று கடைகள் மட்டுமே இருந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது அதிக அளவில் பால்கோவா கடைகள் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரபல கடைகளில் வரி மோசடி நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் பாரம்பரியமிக்க வெங்கடேஷ்வரா, புளியமரத்தடி கடைகள் மற்றும் பால்கோவா கடையின் உரிமையாளர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் வருமானவரித் துறை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
வீடுகள் மற்றும் கடைகளில் நடைபெற்ற சோதனையில், ஏராளமான ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையானது தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா அல்லது உறவினர்களிடையேயான பங்குகளை பிரிப்பதில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்டதா என்று தெரியாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க...தமிழ்நாடு பட்ஜெட் நிகழ்வுகள் உடனுக்குடன்.! உள்ளங்கையில்..!