விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு தேவையான கருந்திரி தயாரிப்பது தற்போது அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலர் இதன் ஆபத்தை உணராமல் தங்களது வீடுகளிலேயே தயாரிப்பதால், பல விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் எம்.டி.ஆர் நகரில் வசித்து வரும் கந்தவேலு, மாரியம்மாள் தம்பதியினர் தங்கள் வீட்டில் கருந்திரி பேப்பர் சுற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குவித்து வைக்கப்பட்டிருந்த கருந்திரி எரிந்து வீடு தரைமட்டமானது. மேலும் இந்த விபத்தில் தம்பதி இருவரும், உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கருந்திரி மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8,000 குரோஸ் கருந்திரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கருந்திரியை பதுக்கி வைத்திருந்ததாக செல்வராஜ் என்பவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.