மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் டாக்டர்.ரகுராமனுக்கு ஆதரவு கேட்டு, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தூர் முக்குராந்ததில் மக்களிடையே பேசினார். அப்போது, “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படி ஓடஓட விரட்டி அடித்தீர்களோ, அப்படி இந்த தேர்தலிலும் ஓட வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுடைய ஜிஎஸ்டி வரிப்பணம் 15 ஆயிரம் கோடி ரூபாயை கேட்டால், தர மறுக்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால், கரோனா காலத்தில் தனியாக செல்வதற்காக 8 ஆயிரம் கோடிக்கு தனி விமானம் 2 வாங்கியுள்ளார் மோடி. ஏற்கனவே டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு கட்டடம் இருக்கும் போது, 10 ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம் எதற்கு. ஆனால் தமிழகத்தின் வறட்சி நிவாரணத்திற்கு வெறும் ஆயிரம் கோடியை கொடுக்கின்றனர்.
மதுரையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, வரும் போது மத்திய, மாநில அரசுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையையும் கையோடு எடுத்து வந்து விட்டேன்” என பிரச்சாரத்தில் ஒரே ஒரு செங்கலை எடுத்துக் காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவே இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, “பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அதிமுக அரசு கூறுகிறது. ஆனால் ஜெயலலிதாவுக்கே இங்கு பாதுகாப்பில்லை. அவரது மரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. பிரச்சாரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து பேசிய என் மீதும், ஸ்டாலின் மீதும் வழக்கு போட்டுள்ளனர். பொள்ளாச்சியில் அதிமுக செயலாளர் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதான் இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு” எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: திமுகவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கிய விசிக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!