விருதுநகர்: பெருஞ்சாணி புதுப்பட்டி கிராமத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது மகமாயி அம்மன் கோயில். இப்பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுவதால், அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளின் பாதுகாப்பு கருதி, அவை பூஜைகுடி கணபதி வீட்டில் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டுவந்தன.
வழிபாடு
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அப்போது கோயில் பூசாரி வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் பூஜை குடிகள், அர்ச்சகர், கிராமத்தினர், குலதெய்வமாக வணங்கக்கூடிய பக்தர்கள் மூலம் ஊர்வலமாகக் கோயிலுக்கு எடுத்துச் சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.
பூஜைகுடி வீட்டில் வைக்கப்பட்ட சிலைகள்
இந்நிலையில், இவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ற வகையில் தனி அறை கட்ட வேண்டும் என அறநிலையத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ஆறு மாதம் வரையில் கால அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாதுகாப்பு அறை கட்டப்படவில்லை.
சிலைகளைக் கைப்பற்ற வந்த அறநிலையத் துறை
இதையடுத்து, சிலைகளின் பாதுகாப்பு கருதி அவற்றை எடுத்துச் செல்ல அறநிலையத் துறை அலுவலர்கள் நேற்று (ஜூன் 22) புதுப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். ஆனால், சிலைகளை எடுத்துச் செல்ல கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் அறநிலையத் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், திருவிழாவுக்குச் சிலைகளை வழிபாடு நடத்த தருவதாகவும், பாதுகாப்பு அறை கட்டப்பட்ட பின்பு சிலைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதியளித்தனர்.
சிலைகளை ஒப்படைத்த கிராம மக்கள்
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அங்கிருந்த மகமாயி அம்மன், வீரபத்திரர், விநாயகர், கருப்பசாமி, நடராஜர் உள்பட பத்து ஐம்பொன் சிலைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க அறநிலையத் துறை அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி