கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்ல பொதுமக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஊர்வலத்திற்கு விதித்த தடையை விலக்கக் கோரி பாஜக, இந்து அமைப்பினர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்காததால் தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சிலையை, பொதுமக்கள் அவரவர் இல்லங்களில் வைத்து வழிபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்து முன்னணியினர், அரசு விதிகளை மீறி பொதுமக்கள் ஒன்றுகூடும் வகையில் அன்னதான ஏற்பாடுகளை செய்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் தாசில்தார் சரவணன் ஆகியோர் இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு உடன்படாத இந்து முன்னணியினர் தொடர்ந்து அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து, இந்து முன்னணியினர் வைத்திருந்த விநாயகர் சிலையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றைத் திரும்ப வழங்கக் கோரி ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை பகுதியில் இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.