விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக ஆஜராக வந்த பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்றார்.
அப்போது பாஜகவை சேர்ந்த அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அவர்கள் வீட்டின் பெண்களை அவதூறாக பேசியதாக இருக்கன்குடி மற்றும் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் அறநிலையத்துறை அலுவலர் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட தனியார் தொலைக்காட்சி நிருபரை பார்த்து நீ யார், எதற்காக ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறாய்? நீங்கள் அனைவரும் அறிவாலயத்தின் கைக்கூலிகள் என்று பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், நான் பேசுவதை போடத்தான் நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற கூறினார். இறுதியில் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளரை சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பினார்.
இதையும் படிங்க: இறந்த மாணவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக அமைச்சர்கள் ஆறுதல் கூறவில்லை - ஹெச்.ராஜா