அருப்புக்கோட்டை அருகே பாறைக்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் மதுரையில் கட்டட ஒப்பந்த வேலைக்காக கடந்த இரண்டு மாத காலமாக பாறைக்குளத்தில் வசித்துவந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் இன்று காலை தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தொழில் நிமித்தமாக பாறைக்குளத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, திருச்சுழி சாலையில் உள்ள தனியார் பஞ்சாலை அருகே வந்தபோது, மணிகண்டனை பின்தொடர்ந்துவந்த கும்பல் ஒன்று, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் இருசக்கர வாகனத்தோடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரோடு வந்த ரமேஷ் என்பவர் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தை அறிந்து விரைந்துவந்த திருச்சுழி காவல் துறையினர் படுகொலைசெய்யப்பட்ட மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முன்பகை காரணமாக மணிகண்டன் கொலைசெய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கொலையாளிகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். பட்டப்பகலில் சாலையின் நடுவே இளைஞர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரவுடி கடத்தி கொலை: சிசிடிவி காட்சி வெளியீடு!