விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவநீத கிருஷ்ணன். கட்டிடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி ஒரு வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் கைக்குழந்தையும் உள்ளன. இவரும், இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மதுப்பழக்கம் உள்ள இவர் நேற்று (ஏப்ரல்.21) வழக்கம்போல் தனது நண்பர்களான அரவிந்தன், கருப்பசாமி, முத்து பாண்டி, வைரமுத்து ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது முற்றி அடிதடியில் முடிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தனது தாய் வீட்டிற்குச் சென்று உறங்கியுள்ளார்.
அப்போது அவரது தாய் அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது 4 நபர்களும் வீட்டிற்குள் வைத்து நவநீத கிருஷ்ணனை கட்டையால் தாக்கி கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர். பின்னர் நவநீத கிருஷ்ணனின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து அருகில் உள்ள பூவநாதபுரம் பகுதியில் உள்ள முட்புதரில் கொண்டுபோய் வீசியுள்ளனர்.
இச்சம்பவம் எதுவும் அறியாமல் கடைக்குச் சென்ற அவரது தாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டுள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் 4 இளைஞர்கள் நவநீத கிருஷ்ணனை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றதாக கூறியுள்ளனர்.
பின்னர் உடனடியாக கிராம மக்கள் அந்த இளைஞர்கள் சென்ற வழியே பின்தொடர்ந்து சென்ற நிலையில், கொலையாளிகளான அரவிந்தன், கருப்பசாமி, முத்துபாண்டி, வைரமுத்து ஆகியோர் எம். புதுப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான் கொலை செய்தோம் எனத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.