விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஆத்திபட்டியைச் சேர்ந்த தங்கவேல் - சரஸ்வதி தம்பதியினரின் மகன் பாஸ்கரன் (29). இவா் 2013ஆம் ஆண்டு காவலா் பணிக்குத் தேர்வாகி பணியில் சோ்ந்துள்ளார். பாஸ்கரன் கடந்த ஒரு ஆண்டாக சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் பாஸ்கரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காவலா் பணியில் சேர்ந்த காவலா்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழு அமைத்தனா். அந்த வாட்ஸ்அப் குழு மூலம் பணியில் இருக்கும் போது இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் குழு மூலம் நிதி சேகரிக்கப்பட்டு வந்தது.
இதில் பாஸ்கரன் குடும்பத்திற்கு சக காவலர்கள் நான்கு லட்சம் ரூபாய் வரை சேகரித்து, அதனை காசோலையாக வழங்கினார்கள். அதேபோன்று கோவை, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். இறந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் நிதியுதவி அளித்த நிகழ்ச்சி அந்தப் பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தூக்கிட்டுத் தற்கொலை!