இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால் நம் முன்னோர்கள் நோய் இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்றனர். இதை இன்றைய தலைமுறையினர் உணரத் தொடங்கியுள்ளனர். இதனால் விவசாயிகளும் இயற்கை விவசாய முறையை கையில் எடுத்துள்ளனர்.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களே சகலமும் ஆகிபோனதால், அதில் இயற்கை விவசாயம் குறித்து தேடியுள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி. அப்பொழுது அவருக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய, குறைவான பராமரிப்பு கொண்ட ரெட் லேடி பப்பாளியை பயிரிட முடிவு செய்தார் அழகர்சாமி. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை கொண்ட விருதுநகரில் சாகுபடி சாத்தியம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். மாற்றுச் சிந்தனை எப்போதும் மகத்தான வெற்றியை தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆகையால் சொட்டு நீர் பாசனம் மூலம் அழகர்சாமி பப்பாளியை வெற்றிகரமாக சாகுபடி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விதை முதல் இலை வரை எல்லாமே விலை தருபவை என்பதால் இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது. கரோனா ஊரடங்கால் பேருந்துகள் இயங்காமல் உள்ள போதிலும் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் என்னை தேடிவந்து பப்பாளி வாங்கிச் செல்கின்றனர்.
எனவே அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயம் நோக்கி திரும்ப வேண்டும். விவசாயம் செய்யும் ஆர்வமில்லாதவர்களும், நம்மாழ்வாரின் வார்த்தைகளை கேட்டால் விவசாயம் குறித்த புரிதல் பிறந்துவிடும்" என்றார்.
காலத்தால் அழியாத இயற்கை வேளாண் முறை குறித்து அறிந்த நம்மாழ்வாரின் சிந்தனைகள் மனிதர்கள் வாழும் வரை அழியாது. இதற்கு விவசாயி அழகர்சாமி போன்றோர் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் என்றால் மிகையாகாது.
இதையும் படிங்க: மயில், குரங்குகளுக்கு இரையாகும் பப்பாளிகள்... ஊரடங்கால் உருக்குலைந்த விவசாயிகள்!