கரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமாக மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இயங்கிவரும் 1,100 பட்டாசு தொழிற்சாலைகளில் ஒரு ஆலைக்கு 50 பேருக்கு மேல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், “பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இடையே எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்கவே மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை மீறும் பட்டாசு கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்கவே மார்ச் 31ஆம் தேதி வரை இந்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மக்கள், கரோனா பற்றி தேவையின்றி அச்சப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் ஒரு பட்டாசு கம்பெனியில் 50 பேருக்கு மட்டும் பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கையால் பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போய் இருக்கிறது. எனவே, அரசு பல லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க முன் வர வேண்டுமென பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் - பெசன்ட் நகர் இணைப்பு சாலை - திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஆணை