விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர் ஒருவர் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது மாங்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாமரங்களை யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி மாங்காய், தென்னை மரங்களை வேரோடு சாய்த்து விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாம்பழம் குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் கூறுகையில், “ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் மாமரங்கள், தென்னை, வாழை போன்றவற்றைக்கொண்டு விவசாயம் செய்துவருகின்றனர்.
தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாமரங்களை குறிவைத்து காட்டு யானைக் கூட்டங்கள் தொடர்ந்து நான்கு நாள்களாக இந்த பகுதியில் முகாமிட்டு மாமரங்களை ஒடித்து, மாங்காய்களை சாப்பிட்டும், தென்னை மரங்களை சாய்த்தும் சேதபடுத்தியும் வருகின்றன. இது குறித்து பலமுறை வனத் துறைக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் மின்வேலி அமைத்து விவசாயிகளையும், விவசாய பயிர்களையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: குன்னூரில் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் - வனத்துறை