விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி (53). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் (செப் 21) அதிகாலை அவரது வீட்டின் அருகே பால் கறக்க சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிவகாசி நகர் காவல் நிலைய காவல் துறையினர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் துலுக்கப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகசாமியை பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, இறந்துபோன முனியசாமியின் சகோதரர் சோலையப்பன் சரஸ்வதிபாளையம் தெருவில் பன்றிகளை வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சோலையப்பன் தனது அண்ணன் முனியசாமியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக இது சம்பந்தமாக கடந்த செப்-19 ஆம் தேதி இரவு துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கட்டப்பாண்டி என்பவரிடம் போய் விசாரணை செய்துள்ளனர். அப்போது அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற களவு நடைபெற்றால் காவல் துறையிடம் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்துவிட்டு முனியசாமி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கட்டப்பாண்டியும் அவரது கூட்டாளிகள் ஆறுமுகசாமி, காளி ராஜேஷ், கார்த்திகேயன், மாரீஸ்வரன், சுரேஷ்குமார், கலையரசன், தங்கவேல் ஆகிய எட்டு பேர் சேர்ந்து அதிகாலை திட்டமிட்டு மறைந்து இருந்து முனியசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அடகுக் கடைக்காரரிடம் மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்: சிசிடிவி வெளியீடு