விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கினார்.
இந்த நிலையில் சிவகாசிக்கு வருகை புரிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் சார்பாக மாலை அணிவித்து, ஆண்டாள் கிளி கொடுக்கப்பட்டது.
இந்தப் பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பரப்புரை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் திமுக அரசு காலம் தாழ்த்தியது. பின்னர் உச்ச நீதிமன்ற அறிவிப்பின்படி நடத்துகிறது.
திமுகவின் 8 மாத கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை. அதற்கு மாறாக அதிமுக அரசு இருந்தபோது தொடங்கப்பட்ட திட்டங்கள் தான் தற்போது முடிவடைந்துள்ளது. அதனைத் தான் தற்போது திமுக திறந்து வருகிறது.
மேலும், தினமும் காலையில் 3 இடங்களுக்குச் செல்கிறார், ஸ்டாலின். பின் அங்குள்ள தேநீர் கடையில் டீ குடிக்கிறார். டீ குடிப்பதற்கும், பளு தூக்குவதற்கும், சைக்கிளில் செல்வதற்குமா உங்களை மக்கள் முதலமைச்சர் ஆக்கி உள்ளனர்.
திமுக, மக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பேச்சுகளைப்பேசி தான் ஆட்சியைப்பிடித்து இருக்கிறார்கள். கவர்ச்சிகரமாகப் பேசி ஆட்சியைப் பிடித்தவர்களிடம் இப்படித்தான் செய்வார்கள்.
இன்றைய திமுக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதைப் பற்றித் தான் யோசிக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் பரிசுத்தொகை மற்றும் தரமான பொருட்கள் கொடுத்தது அம்மா அரசு தான்.
மேலும் கடந்த ஆட்சியில் 5000 ஆயிரம் கொடுக்கச் சொன்ன ஸ்டாலின் இந்த முறை 100 ரூபாய் குடும்ப அட்டைக்குக் கொடுத்தாரா?’ எனக் கேள்வி எழுப்பினார், எடப்பாடி பழனிசாமி.
மேலும் அவர், 'இந்தப் பொங்கல் பண்டிகையின்போது மக்கள் சிரமப்பட்டார்கள். திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம்.
இந்த அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது. கருணாநிதி காலத்தில் இருந்தே அதிமுக மீது பொய் வழக்குப் போட்டு வருகிறார்கள். எல்லா வழக்குகளையும் சந்திக்கும் சக்தி அதிமுகவிற்கு உண்டு.
ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, அந்தப் பணத்தை ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்தார்களாம். அதைக்கேட்டுப் பொய் வழக்கு ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
திமுகவின் 8 மாத ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து இருக்கிறது. எங்கும் கொலை, கொள்ளை தான் நடக்கிறது. தமிழ்நாட்டை ஆளத் தெரியாத ஒரு பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்’ எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
’முதலமைச்சர் மக்களுக்காக வேலை பார்க்காமல் சொந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். மேலும் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டிருந்தபோது ராஜேந்திர பாலாஜி மற்றும் 20 அமைச்சர்கள் இணைந்து மத்திய அமைச்சரைச் சந்தித்துச் சரி செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள்.
ஆனால், இதுவரை செய்யவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிக்கைவிடுத்து 8 மாதம் ஆகியும் வழங்கவில்லை. மேலும் நகைக் கடன் வாங்கிய 48 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அறிவித்துவிட்டார்கள்.
அதனால் 35 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டு, தற்போது கூடுதல் வட்டியைச் செலுத்தி வருகிறார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தியதிற்கு இது அவர்களுக்குத் தண்டனையா' எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
'யாரைக்கண்டும் ஓடி ஒளியப்போவது கிடையாது'
இதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "எடப்பாடியார் கடந்த ஆட்சியில் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். சிவகாசியில் பல கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் எடப்பாடி. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும். உண்மையைச் சொல்லி அதிமுகவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தாலே வெற்றி பெற்று விடுவோம்.
மேலும் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். பட்டாசு தொழிலைப் பாதுகாத்தவர் பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர், எடப்பாடி பழனிசாமி. இன்றைய நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். யாரைக் கண்டும் ஓடி ஒளியப் போவது கிடையாது. பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன்" என்று பேசினார்.
அதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "8 மாத காலம் எந்தத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்குகிறார். கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துள்ளார். இந்த அரசு கொள்ளை அடிப்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளனர்.
பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட 2500 கொடுத்த அரசு அதிமுக, பொங்கல் தொகுப்பினை தரமானதாக வழங்கியது அம்மா அரசு. 5000 கொடுக்கச் சொன்ன ஸ்டாலின். தற்போது எதுவும் வழங்கவில்லை. மக்களின் வயிற்றில் அடித்த கட்சி திமுக, சர்வாதிகார அரசாங்கம் திமுக அரசு நியாயத்தை, இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
கட்சியை உடைக்க அதிமுக நிர்வாகிகள் மீது தேடித் தேடி வழக்குப் போடுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி மீது வேண்டுமென்று வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வேடிக்கையாக உள்ளது. எதற்கும் அஞ்சப் போவதில்லை" என்றார்.
மேலும் பேசிய எடப்பாடி, "ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளைவிட தன் குடும்பத்தை மட்டுமே பார்க்கிறார். மாநகராட்சி அறிவித்தது, திறந்து வைத்தது அதிமுக அரசு. சிவகாசி மாநகராட்சி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 100 கோடிரூபாய் ஒதுக்கியது அதிமுக அரசு.
பள்ளிகளைத் தரம் உயர்த்தியது. பேருந்து நிலையம் அமைத்துக் கொடுத்தது, கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு.
8 லட்சம் தொழிலாளர்களின் நலனைக்கருதி GST குறைத்தது. பட்டாசுத் தொழிலாளர்களுக்குத் தீக்காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கியது.
பட்டாசு பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு. திமுக ஆட்சி வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்று கூறியதே அது என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனர். சொல்வது ஒன்று. செய்வது ஒன்று தான் இந்த திமுக அரசு, லஞ்சம் இல்லாத துறையே இங்கு இல்லை" என்றார்.
இதையும் படிங்க: லிஃப்டில் சிக்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம் நடிகர் புகழ்