திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று (டிச.28) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ராஜபாளையம் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய கனிமொழி, “விடியலை நோக்கி ஸ்டாலின் பயணம் பரப்புரையில் தொழிலாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனச் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சந்தித்து வருகிறேன்.
அவர்களின் கோரிக்கையை கேட்டறித்து வருகிறேன். அந்த வகையில், இன்று ராஜபாளையம் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன்.
கடந்த பத்தாண்டுகளில் மகளிர் குழுக்களுக்கு தேவையான திறன்வளர் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கரோனா காலத்தில் கூட அவர்களுக்கு எந்தவொரு நிதி உதவியும் வழங்கப்படவில்லை.
சுயத்தொழிலுக்காக தனியாரிடம் கடன் பெற்றும், கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியும் உள்ளதாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.
இதனால், கடன் பிரச்னையை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சந்தித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் படித்தவர்களுக்கு வேலை இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், அதிமுக அரசு மீதான குற்றப்பத்திரிகையில் வேலைவாய்ப்பு இழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி காலத்தில் 10.5 விழுக்காடாக இருந்த பொருளாதாரம் இன்று 6.6 விழுக்காடாக சரிந்துள்ளது .
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு தொழிற்சாலை, தீப்பெட்டி தொழிற்சாலை, பேண்டேஜ் தொழிற்சாலை தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்முனைவோர்கள் ஜிஎஸ்டி வரியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைகள் தொடர்பில் தற்போதுவரை தமிழ்நாடு அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறுகிறார்.
நாங்கள் அறிவிக்கும் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம். திமுகவினர் வாரிசு அரசியல் செய்து வருகின்றனர் எனக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
எங்களிடம் வாரிசு அரசியல் இல்லை. தலைவர் கலைஞர் சொன்னது போல தான், எங்கள் குடும்பத்தை வெறும் புகைப்படத்தில் அடக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழ் சமூகமே அவரது குடும்பம் தான். தமிழ் சமூகத்தின் மீதான பற்று காரணமாக நாங்கள் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டோம். கொள்கையை முன்னிறுத்தி தான் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க : அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சியை அகற்றிட நாங்கள் சபதம் எடுத்துள்ளோம் - திருநாவுக்கரசர்