விருதுநகர்: திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நீட் தேர்வு குறித்தான பிரத்யேக பேட்டியளித்தார்.
அதில், “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த மாணவர் ஜீவிதகுமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்; வாழ்த்துகள்! அவருடைய வெற்றிக்கு காரணமான ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த மதிப்பெண் பெற்ற மாணவர் முதல் முறையிலேயே ( First Attempt) இந்த மதிப்பெண் பெறவில்லை. இரண்டாவது முறையாக தேர்வு எழுதிய மாணவர், 664 மதிப்பெண் பெற முடிகிறதென்றால் அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து அதன் வாயிலாகத் தனியே பயிற்சி பெற்றது தான் காரணம். அவருக்கு கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு, பிற மாணவர்களுக்கு உறுதியாக கிடைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அதேபோல் அரசு பள்ளியில் இந்த முறை 57 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். 57 விழுக்காடு தேர்ச்சியான மாணவர்களுக்கு, மருத்துவ இடம் கிடைக்கும் என்பது உறுதியானது இல்லை. தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருக்கலாம். ஆனால் இந்தத் தேர்வின் மூலம் மருத்துவ இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அடிப்படையிலேயே நீட் என்பது சமூக நீதிக்கும், நம்முடைய மாணவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் ஒன்றாக உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் நீட் தேர்வின் மூலம் வாய்ப்புகள் கிடைக்காது. அரசு ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் எத்தனை பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற புள்ளி விவரத்தையும் அரசு வழங்கவில்லை. ஒரே ஒரு மாணவர் இரண்டாவது முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருப்பது அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி அடைந்து விட்டார்கள் என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவது முற்றிலும் தவறு.
நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவு என்பது கானல் நீராகத்தான் இருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் வந்துள்ளது. திரிபுராவில் இந்தமுறை 4,237 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 88 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தேர்ச்சிபெற்றதாக தேர்வு முடிவுகள் முதலில் வந்தது.
நீட் நடத்தக்கூடிய அமைப்புகளின் நம்பகத்தன்மையை, இது போன்ற குழப்பங்கள் நிறைந்த தேர்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய கல்வி வாய்ப்புகளை நீட்தேர்வு தட்டி பறித்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை” என்றார்.