தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசியில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து பணம் தராமல் இழுத்தடிக்கும் தரணி சக்கரை ஆலையை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "கரும்பு சக்கரை ஆலை சட்டப்படி கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அளித்த பின்பு 15 நாள்களுக்குள் ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும். அதன்படி ஆலை நிர்வாகம் பணம் தர தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பணம் பெற்று தர வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பு. சிவில் நீதிமன்றத்தில் தலையிட முடியாது என உள்ள நிலையில் தரணி சக்கரை ஆலை நிறுவனம் விவசாயிகளுக்கு 22 மாதங்களாக கொள்முதல் செய்த கரும்பிற்கு பணம் தரவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழில் துறை அமைச்சரிடம் முறையிட்டும் இதுவரை பலன் கிடைக்கவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்!