அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி மகிமைபுரத்தில் சுமார் 131 ஏக்கரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 53 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடி மதிப்பீட்டில் 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.174 கோடி மதிப்பீட்டில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ.101 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு; மருதையாற்றில் ரூ.25 கோடியில் புதிய தடுப்பணை; ரூ.645 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம், ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பில் தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடம்; பெரம்பலூரில் புதிய வெங்காய மையம்; நரியனூர், வெற்றியூர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்களையும் அறிவித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் " ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @geethajeevandmk pic.twitter.com/qowo5wFnTs
— TN DIPR (@TNDIPRNEWS) November 13, 2024
அப்போது அவர் பேசுகையில், "ரூ.578 கோடி மதிப்பில் மகளிர் பேருந்துகளில் கடந்த நான்காண்டுகளில் பயணம் செய்துள்ளனர். விழா காலங்களில் சென்னையிலிருந்து புறப்படும் பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி தங்களது சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்கு தேவையான திட்டம், அதற்கு தேவையான நிதி ஆகியவற்றை அதிகாரிகளே பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணாமல் நேரடியாக கள ஆய்வு செய்து மக்களின் ஆதரவு பெற்ற அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆட்சியில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு, அவற்றை தீர்ப்பதால் என்னை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டத்தை பார்த்து, அவர்களின் நம்பிக்கை, அன்பை, கண்டு எடப்பாடிக்கு பெரிய கலக்கம் உருவாகியுள்ளது.
அதனால், தினந்தோறும் எடப்பாடி பழனிசாமி தன்னை மறந்து மீடியா முன்பு பொய் மூட்டைகளை அடுக்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி கொடுத்ததாகவும் கூறி வருகிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் பளிச்சென்று உடனே தெரிந்து விடும் அளவிற்கு அவர் கூறி வருகிறார்.
களப்பணியில் முதல்வர்!
— TN DIPR (@TNDIPRNEWS) November 15, 2024
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட முதல்வர்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@KN_NEHRU @evvelu @MRKPanneer@sivasankar1ss @TRBRajaa @mp_saminathan pic.twitter.com/oO49vnOeB6
மேலும், தனது ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி, முதலீடு மாநாடு நடத்தியதன் மூலம் தமிழ்நாட்டில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது? எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று அவரால் பட்டியலிட்டு கூற முடியுமா? அவரின் ஆட்சி காலத்தில் தொழில் முதலீடு செய்வதற்காக வந்தவர்கள், கலெக்ஷன் மற்றும் கரப்ஷன் என்ற காரணத்தினால் ஓடி விட்டனர்.
ஆனால் தற்பொழுது, திமுக ஆட்சி ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 31 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாது, எப்படா முடியும் எடப்பாடி ஆட்சி என்று ஒவ்வொரு தமிழ் மக்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது எங்களது திராவிட மாடல் ஆட்சியை மக்கள் நம்பிக்கையோடு பார்ப்பதோடு, இந்த ஆட்சி தொடர வேண்டும்" என்று கூறுகின்றனர் என முதல்வர் பேசினார்.
இதையும் படிங்க: "திமுக - அதிமுக இரு கட்சிகளுக்கும் நல்லது செய்யும் எண்ணம் இல்லை" - நீதிபதி வேல்முருகன் வேதனை!
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு உறுதியாக பாடுபட்டு வருகின்றேன். அந்த வகையி, மக்களை தேடி மருத்துவம்; விடியல் பயணத் திட்டம்; மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி வருகிறோம்.
இதுமட்டும் அல்லாது, 'ஊட்டத்தை உறுதி செய்' திட்டம் முதல்கட்ட தொடக்கத்தில் 26 ஆயிரத்து 705 குழந்தைகளின் வீட்டுக்கு நேரடியாகவே சென்று, ஊட்டச்சத்து வழங்கியதால் 77.33 விழுக்காடு குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இன்று வாரணாசி-யில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, காலை உணவு திட்டத்தால் 12 லட்சம் குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்