விருதுநகர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு தமிழ் ஆண்டும், பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திரம் அன்று, ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின்றியே திருக்கல்யாண விழா உற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த ஆண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மங்கள நிகழ்ச்சியுடன் தொடங்கி, உற்சவமானது ஆடிப்பூர கொட்டகையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத சிறப்பாக நடைபெற்றது. கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோயில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதனைப் பெற்றுக்கொண்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை நடைபெற்றது. தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில், பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது பக்தர்கள் ’கோவிந்தா கோவிந்தா’ என்று முழங்க, அர்ச்சகர் வாசுதேவ பட்டர் ஸ்ரீரங்க மன்னாரிடம் இருந்து வாங்கிய திருமாங்கல்யத்தை ஸ்ரீஆண்டாளிடம் அணிவித்தார். வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவில் பக்தர்களுக்கு திருமாங்கல்யக் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக இன்று (மார்ச்.29) காலை ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.