தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் கோ-ஆப்டெக்ஸில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கான 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடியை ஆட்சியர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள் போன்ற பல்வேறு வகையான நவீன டிசைன்களில் விருதுநகர் விற்பனை நிலையத்தில் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று ரூ. 46.28 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு விற்பனை இலக்கு 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.