விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள வரகுணராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (65). இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். உச்சி வெயில் மண்டையை பிளக்கும் மதிய வேளையில், வயலுக்குள் சுற்றித் திரிந்த நல்லபாம்பு எதிர்பாராத விதமாக நாகம்மாளை கடித்துள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சக பணியாளர்கள், நல்ல பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு நாகம்மாளையும் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மட்டுமே பாம்பு கடித்தவருக்கு முதலுதவி செய்தனர். மாலை 5 மணி ஆகியும் மருத்துவர்கள் எவரும் வரவில்லை என்று தெரிகிறது. அப்போது நாகம்மாள் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார்.
பின்னர், மருத்துவமனைக்குள் வந்த மருத்துவர் நாகம்மாளை சோதித்து பார்த்ததில் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவரின் அலட்சியப் போக்கால் நாகம்மாள் உயிரிழந்தார் எனக் கோபத்துடன் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் நாகசங்கர், நாகம்மாளின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் மருத்துவமனையில் மருத்துவர் இருந்து கொண்டு சிகிச்சை அளிக்க வராததைக் கண்டித்து உறவினர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவரின் அலட்சிய போக்கால் பாம்பு கடித்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மக்கள் சந்திப்பைத் தவிர்க்க வேண்டும்' - புதுச்சேரி பேரவைச் செயலர்